லைப்ரரியும் சினிமா தியேட்டரும்
இது என் முதல் தமிழ் பதிவு.
உலகத்தை அளந்தது போல் ஒரு சிலிர்ப்பு.
இது எப்படி வருகிறது என்று பார்த்து, இனி தமிழிலும் பதிவு பண்ணலாம் என்று இருக்கிறேன்.
கடந்த ஒரு வாரமாக எழுத முடியவில்லை..காரணம்? சென்னை பயணம்.
5 மாதங்களில் சென்னை மாறிவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. அதே மெரினா, அதே மின்சார ரயில், அதே புழுதி கலந்த தெரு. இந்த முறை இன்னும் நிறைய பள்ளம் தோண்டி இருக்கிறார்கள்.
கன்னிமாரா லைப்ரரியில் நிரந்தர புத்தக கண்காட்சி. எப்போதோ கேள்விப் பட்டது, போய் பார்த்து வர கிளம்பினேன். பஸ் பிடித்து ஸ்பென்சர்ஸ் வரை சென்ற நான் அங்கிருந்து கன்னிமாரா லைப்ரரி செல்ல ஆட்டோ பிடிக்க முயற்சித்தேன்.
"கன்னிமாரா லைப்ரரி போனும்பா"
"வராது சார்"
"கன்னிமாரா லைப்ரரி..."
"ஹிஹி..இன்னா சார் பக்கத்து பில்டிங் போறதுக்கு ஆட்டோ கேக்கறியே?"
"அது ஹொட்டல், நான் சொல்றது லைப்ரரி"
"எங்க இருக்கு?"
"நேரா போயி..."
இதற்குள்ளாக பக்கத்தில் இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் சுற்றிக்கொண்டார்கள்
"இன்னா டில்லி எங்க சவாரி?"
"கன்னிமாரா லைப்ரரி எங்கன்னே இருக்கு?"
"பக்கத்து பில்டிங்ப்பா..."
"அது இல்லிங்க...நான் சொல்றது லைப்ரரி நேரா போயி ரைட்ல திரும்பினா மியுசியம் இல்ல, அது பக்கத்துல"
"ஆமாம்பா அங்கே ஒரு லைப்ரரி இருக்கு"
"20 ருபா சார்"
"15 ருபா"
"சரி ஏறு சார்"
10 ருபாய்க்கு கேட்டிருக்கலாமோ என்று யோசிப்பதற்குள் லைப்ரரி வந்து விட்டது.
2 மனிநேரம் கழித்து வந்து ஆட்டோ கூப்பிட்டேன்,
"சத்யம் போகனும்ப்பா"
"ஏறு சார் 25 ருபா" உடனடியாக வந்தது பதில்.
(பி.கு: பெரிய தொகுப்பு இல்லையென்றாலும், பாராட்டப் பட வேண்டிய முதல் படி. பதிப்பகத்தார் ஜனவரி புத்தக கண்காட்சியில் காட்டும் ஈடுபாட்டில் 10% இதில் காட்டினால் இன்னும் நன்றாய் இருக்கும். வாங்கிய புத்தகங்களை பற்றி
பிறகு எழுதிகிறேன்.)
<< Home